முதற் பக்கம்

மகளிர்/அன்னையர் தினம்

அட்லாண்டா தமிழ்ச் சங்கத்திலிருந்து மே மாத முதல்வாரத்தில் ஓரு கைப்பேசி அழைப்பு வந்தது.

அழைத்தவர் அந்தச் சங்கத்தின் ஆர்வலர் வைஷ்ணவி சந்தோஷ்.

மே பத்தாம் தேதியன்று அன்னையர் தினம் வருகிறது, அதற்கு சில வரிகளை எழுதித்தர முடியுமா? நான் காணொளியில் வாசித்து இணையத்தில் பதிவேற்றம் செய்யப் போகிறேன் என்கிறது குரல்.

சற்றே யோசித்துச் சம்மதித்தேன்.  பாடுபொருள் மிகப்பெரியது. நான்கைந்து வரிகளில் உரைநடை வடிவில் எழுதுவதா கவிதை வடிவில் எழுதுவதா என்று யோசித்தேன்.

கவிதையால் அலங்கரிப்பதே மேன்மையெனத் தோன்றியது.

அந்தக் கவிதை இதோ!


மேலோனின் ஆணைக்குக் கருவானாள்
மென்மையான சுகவுலகில் உயிரானாள்
மேனியினால் திருமகளாய் உருவானாள்
மேன்மைகளில் மேன்மைக்கு மகளானாள்

பூமியின் தோள்களிலே தவழ்ந்தபடி
பூங்கால்கள் எட்டுவைத்து உலகளந்தாள்
தாயவளின் மடிகளிலே மகிழ்ந்தபடி
சிமிட்டுகின்ற பார்வைகளில் வானளந்தாள்

நட்டுவைத்த பூச்செடிகள் ஆசைகொள்ள
நடைபயிலும் நந்தவன மயிலானாள்
பொட்டுவைத்துப் பூச்சூடிப்  புனிதம்கொள்ள
மங்கையென்று அவதரித்து ஒயிலானாள்

விடைதெரிந்த வினாக்களையும் வினவியபடி
வீடே ஓர்  சிறையென்று சலித்தபடி
மடைதிறந்த எண்ணங்கள் மனதில்வர
தடைதகர்க்கும்  யுவதியென்று பரிணமித்தாள்

காலமென்ற ஆசானின் கட்டளைக்கும்
கடைசிவரை காத்திருக்கும் ஜீவனுக்கும்
கண்ணகியைப் போலவள் கற்புடைத்தாள்-தன்
கணவனிடம் தன்னை ஒப்படைத்தாள்

படைப்போனும் கனிவான பார்வையிலே - தன்
பாத்திரத்தை ஏற்பவர்யார் எனத்தேடி
பெண்ணிடமே தன்பங்கில் பாதிதந்து
பெண்ணினமே மேன்மையெனப் போற்றிவைத்தான்!


வைஷ்ணவி சந்தோஷின் காணொளி



உதயகுமார் J.R.

இறைவனின் ஊடகங்கள்-3

(முதற்பகுதி இங்கே) 

நம்மைச் சுற்றியுள்ள பொருட்களே ஊடகமாக மாறுவதைப் பற்றிப் பார்க்கலாம்.

நாம்  நமது தினசரி வாழ்க்கையின் பெரும்பாலான நேரங்களில், ஐந்து புலன்களின் எல்லைகளுக்குள் வாழ்கிறோம்.

அவையே மனதின் இயக்கத்தை தங்கள் கட்டுக்குள்  கொண்டுவந்து விடுகின்றன.

இந்த ஐந்து புலன்களும் எதுவரை பயன்படுகின்றன என்பது அவற்றின் உபயோக எல்லைகளைத் தொடும்போது தெரிகிறது.

கண்கள் பார்க்க முடிகிற தூரம் ஓர் எல்லை.
காதுகள் கேட்க முடிகிற ஒலியளவு ஓர் எல்லை.
நாசிகளுக்கு நுகரும் திறன், நாவிற்குத் தெரிகிற சுவைகள், உடல் உணரக்கூடிய ஸ்பரிசங்கள் - இவை யாவும் வரம்புகளுக்கு உட்பட்டவையே!

நம் மனம் பரம்பொருளின் அதிர்வலைகளை உணரமுடியாத நிலையில் இருக்கும் போது, இறைவன் ஒரு விஷயத்தை நம்மிடம் உணர்த்துவதற்கு நாம் இருக்கும் எல்லைக்குள் உள்ள பொருட்களையே பயன்படுத்துகிறான்.

அந்நேரம் நமைச் சுற்றியுள்ள பொருள்களில் ஏதாவதொன்று இறைவனின் ஊடகமாக மாறிவிடுகிறது. அப்படிப் பார்த்தால் நம்மைச் சுற்றியுள்ள எந்த ஒரு பொருளும் ஓர் ஊடகமாக மாறக்கூடியதே!

ஒரு பொருள் வெறும் ஜடப்பொருளாக இருப்பதும் நாம் கவனிக்கும் போது அது ஒரு தகவல் பரிமாற்றச் சாதனமாக மாறுவதும் நம் அனுபவத்தில் நிகழக்கூடியவை.

இந்த அனுபவத்தை இறைவன் எளிதில் நிகழ்த்தி விடுகிறான், பல நேரங்களில் நாம் அறியாமலேயே...

அறியும் போது, இறைவனை உணர நமக்குச் சந்தர்ப்பம் கிடைக்கிறது.

இந்தச் சந்தர்ப்பங்களை உணர, உங்களின் மனதை திறந்து வைத்திருக்கிறீர்களா?



-உதயகுமார் ஜே.ஆர்.