முதற் பக்கம்

சொந்த மண்ணிலே...



வெளிநாடுகளில் வாழும் சின்னஞ்சிட்டுக்களைக் காணும் போது அவர்களின் துணையில்லாத் தனிமையைக் கண்டு உருகுகிறேன்.

அந்த பிஞ்சு இதயங்களின் வாழ்க்கையை என்னவென்று சொல்வது?

காலம் அவர்களைச் சொர்க்கத்தில் சிறைவைத்துவிட்டது! 

விளையாடத் தோழிகளே இல்லாத வெளிநாட்டுச் சொர்க்கம் அது.

அவளின் சொந்தங்கள் எங்கே? 

இளைய பூவின் இதயத்தை இலகுவாக்கும் ஆட்டங்கள் எங்கே? தேடிப் பார்க்கிறேன்.....


சொந்த மண்ணிலே வாழ்பவளில்லை
சுகமாய் வசிக்க வந்தாளோ ?
வந்த மண்ணிலே சொந்தம் இல்லை
வரமாய் இதையே பெற்றாளோ ?

விளையாடத் தெருக்கள் இல்லை
விண்ணைமுட்டும் வீடுகள் வீணே !
களிப்படையக் காட்சிகள் இல்லை
சலிப்புதட்டும் பொம்மையும் வீணே !

ஓடியொளிந்தாட ஒருத்தியும் இல்லை
கோடிபணமோ கொஞ்சிட வில்லை !
வேடிக்கைதான் விழிகளுக் கில்லை
வேண்டா உணவோ வெறுப்பின் உச்சம் !

பல்லாங் குழியில்லை பகடையில்லை
சில்லாக் கில்லை சிறுகல் லில்லை !
பாவம் இவளோ அறியா ஆட்டம்
பழகிப்பார்த்தால் மற்றது மட்டம் !

நேசம் செய்யா இயந்திரப் பொம்மை
பேசிய வார்த்தை இருபதுமில்லை !
நேரம் காட்டும் முள்ளோ நகரும்
நேரம் மட்டும் நகர்வது மில்லை !

இருவர் ஆடும் ஆட்டம் மட்டும்
எத்தனை உளவே அறிவாளோ ?
ஈடேயில்லா ஆட்டத் துணையை
இனியும் இவளே பெறுவாளோ ?

ஆடித் திளைக்க அமைதி கலைக்க
அருகில் துணையைத் தேடுகிறாள் !
தேடிய வரையில் வெறுமை மிச்சம்
தானே பாத்திரம் பூணுகிறாள் !

இவளே ஓரணி இவளே எதிரணி
இரண்டு புறமும் ஆடுகிறாள் !
இதுவே வாழ்வின் உச்ச மென்றே
இயன்ற புன்னகை சூடுகிறாள் !

இவையே இந்தப் பூவின் தினசரி
இனிய பொழுதின்றி இளைக்கிறாள் !
ஒவ்வொரு வாரம் ஞாயிறு வந்தால்
உலவும் நினைவில் திளைக்கிறாள் !

கடைகள் கண்டால் கண்கள் விரிய
கடைசி வரையில் ரசிக்கிறாள் !
புதிது புதிதாய் பொருளோ புரிய
பூமியை பலமுறை வியக்கிறாள் !

சின்னஞ் சிறுசிறு பார்வை கொண்டே
நெஞ்சில் உலகம் திறக்கிறாள் !
நேரும் ஒவ்வொரு நிகழ்வு கண்டே
சேரும் அறிவில் சிறக்கிறாள் !

கடலைக் கடந்து வந்த குஞ்சிவள்
காணா உறவுகள் எத்தனையோ ?
மனனம் செய்ய வாரந் தோறும்
கணினித் திரையைக் காண்கிறாள் !

உலகம் பார்க்க இன்னோர் ஜன்னல்
உற்ற துணையாய்க் கொள்கிறாள் !
கொஞ்சம் கொஞ்சமாய் ஆடிப்பழகிட
கணினிப் பாத்திரம் வெல்கிறாள் !

சொந்த மண்ணின் சுகங்கள் எங்கே ?
சொல்லா அனுபவம் இழக்கிறாள் !
சொர்க்கக் கூட்டில் அடைகாத்தாலும்
எண்ணம் தேக்கிப் பிழைக்கிறாள் !

சொந்த மண்ணிலே வாழ்பவளில்லை
சுகமாய் வசிக்க வந்தாளோ ?
வந்த மண்ணிலே சொந்தம் இல்லை
வரமாய் இதையே பெற்றாளோ ?

                                          - உதயகுமார் J.R.