முதற் பக்கம்

தேசம் எந்தன் தேசம்

ஒருமுறை செல்வராஜ்குமார் அவர்கள் என்னிடம் வந்து, "தம்பீ தேசபக்திப் பாடல் ஒண்ணு எழுதுறியா? ரெண்டு வாரத்தில ரெக்கார்டிங் பண்ணணும்."

அதற்கு நான் யோசித்துக்கொண்டே, "ரெக்கார்டிங்கா? எங்கேண்ணே?"


அவர், "திருநெல்வேலி ரேடியோ ஸ்டேஷனுக்காக ஒரு சான்ஸ் கெடச்சிருக்கு. நம்ம ஸ்கூல் புள்ளைங்கதான் பாடப் போறாங்க. எப்போ எழுதித் தர்றே?"


"ஒரு வாரம் டைம் குடுங்க. முயற்சி பண்றேன்."


"ஒரு வாரம் எல்லாம் டைம் இல்ல. ரெண்டு நாள்ல குடுக்குற!"

அன்றைய ஒரு மாலைப் பொழுதில் ஸ்பிக் நகர குடியிருப்பில் எனக்கு ஒதுக்கிஇருந்த வீட்டில் அமர்ந்து சிந்திக்க ஆரம்பித்தேன்.
இரண்டு நாட்களில் எழுதிக் கொடுத்தேன். மெட்டமைத்தார். அடுத்த வாரம் திருநெல்வேலி வானொலியில் தேசபக்திப் பாடல் பகுதியில் ஒலிபரப்பானது இந்தப்பாடல்!

 

* * *

தேசம் எந்தன் தேசம்
பழமை புதுமை கொண்ட எந்தன் தேசம் !
பேசும் புகழ் பேசும்
புவனமெல்லாம் அதன் புகழ் பேசும் !

பாரதமே எந்தன் பாரதமே - உனைப்
போற்றிடவே இந்தப் பா...ரதமே !


                                                                                (தேசம்)

 சரணம் 1:

சித்தனைக் கண்டது புத்தனைக் கண்டது
தத்துவம் சொன்னது எந்தன் தேசம் !
யுத்தமும் கண்டது வெற்றியைக் கொண்டது
ரத்தமும் சிந்திய எந்தன் தேசம் !

காலங் காலமாய் காத்துவரும் - நல்
பண்புகள் கொண்டது எந்தன் தேசம் !
ஆலயங்கள் பல அரண்மனைகள் உண்டு
சரித்திரம் சொல்லிடும் எந்தன் தேசம் !

சரித்திரம் சொல்லிடும் எந்தன் தேசம் !
                                                                                (தேசம்)
 

சரணம் 2:

வானத்தில் கோள்களை ஏவிய நாள்களில்
விண்ணைத் தொட்டது எந்தன் தேசம் !
கணிப்பொறி ஏற்கும் கட்டளை இடுவதில்
வித்தைகள் கொண்டது எந்தன் தேசம் !

இனிவரும் நாளில் இன்னொரு கோளில்
இல்லங்கள் அமைத்திடும் எந்தன் தேசம் !
அறிவினிலே செயல் புரிவதிலே - தனிப்
பெருமைகள் கொள்ளும் எந்தன் தேசம் !

பெருமைகள் கொள்ளும் எந்தன் தேசம் !
                                                                                (தேசம்)
 

உதயகுமார் ஜே.ஆர்.

காலம் பார்த்து

எனது மூத்த நண்பர் செல்வராஜ்குமார் தூத்துக்குடி வானொலிக்காக என்னிடம் ஒரு பாடல் எழுதச் சொன்னார். எழுதியபின் அவர் மெட்டமைத்து
வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில் தொண்ணூறுகளில் ஒலிபரப்பானது இந்தப் பாடல்!


காலம் பார்த்து நேரம் பார்த்து நாத்துநட்டு பாத்திகட்டி
தண்ணிய ஊத்தி வளர விட்டு காத்துப்பாரு - பயிர்
விளஞ்சி வந்து களஞ்சியமே நிரம்பிடும் பாரு
சந்தோஷம் கொண்டாட வழிபொறந்திடும் பாரு

                                                                                  (காலம் பார்த்து)

சரணம் 1:

நாட்டுக்குள்ள தரிசையெல்லாம்
நஞ்சைகளா மாத்தணுங்க
ஆத்துத்தண்ணி அளந்தெடுத்து
நிலத்துக்கெல்லாம் திருப்பணுங்க

நிலத்திலெல்லாம் பயிர்வளர்த்து செழிக்க விடணுங்க - இங்க
தரிசான இடத்தையெல்லாம் ஒழித்து விடணுங்க!

அது நடந்துவிட்டா பாலையெல்லாம் சோலைகளாகும்!
வரும் காலத்திலே பஞ்சமெல்லாம் பறந்தே போகும்!

                                                                                  (காலம் பார்த்து)

சரணம் 2:

தானியங்கள் காய்கறிகள்
நாளுக்குநாள் விளஞ்சிவந்தா
விலைவாசி குறைஞ்சிடுங்க
வாழ்க்கைத்தரம் உசந்துடுங்க

உலகத்துக்கே நம்நாடு வழியைக்காட்டணும் - இந்த
உலகத்துல நம்நாடு ஓங்கி வளரணும்!

இது நடந்துவிட்டா பூமி ஒரு சொர்க்கமாகும் !
நலம் பெறுவதெல்லாம் மாமனித வர்க்கமாகும்!

                                                                                  (காலம் பார்த்து)

* * * * *

ஒவ்வொரு சரணம் பாடும் போதும், ஒவ்வொரு வாத்தைக்குப்பின் ஹோய்... ஹோய்... என்ற கோரஸ் இந்தப் பாடலுக்கு அழகு சேர்த்தது!

அந்தச் சரணம் என் மனதில் ரீங்காரமிடுகிறது....

நாட்டுக்குள்ள ஹோய்... ஹோய்...  தரிசையெல்லாம் ஹோய்... ஹோய்...
நஞ்சைகளா ஹோய்... ஹோய்...  மாத்தணுங்க ஹோய்... ஹோய்... 

பாடலைப் பத்திரமாக வைத்திருக்க முடிந்தது. பாடலின் ஒலிப்பதிவுதான் என்னிடமில்லை!


-உதயகுமார் ஜே.ஆர்.

முதல் பாடல்


என் மூத்த நண்பர் அண்ணன் செல்வராஜ்குமாரும் நானும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்தோம். 


அந்த நிறுவனத்தின் குடியிருப்பில் நிறைய சங்கங்கள் இருந்தன. அவர் அங்குள்ள கலாச்சாரக் குழுவின் பிரதான இசைக்கலைஞர்களில் ஒருவராக இருந்ததால், அதன் நிகழ்ச்சிகளில் இசையமைப்பது அவரும் அவருடைய குழுவும் தான்.

காலை, மதியம் மற்றும் இரவுப் பணிநேரம் என மூன்று மாற்று முறைகள் நடைமுறையில் இருந்த அங்கு, ஒருநாள் இரவுப் பணியில் அவரும் நானும் வந்து அமர்ந்தோம்.

இரவுப் பணியில் அவ்வப்போது செய்யவேண்டிய வேலைகளை செய்தபின் கிடைக்கும் மிச்ச நேரத்தில், சிலர் தொழில்நுட்பப் புத்தகங்கள் படிப்பதுண்டு.
பகுதிநேரப் படிப்பு மேற்கொண்டவர்கள் படிப்பதும் குறிப்பெடுப்பதுமாக இருப்பர். இரவு நேரமல்லவா? நேரமும் போகவேண்டும் ஆனால் அது பயனுள்ள வகையில் போகவேண்டும்.

கட்டுப்பாட்டு அறைக்கு வெளியிலிருந்து, 'ஜோ' வென்ற மெல்லிய சத்தம் உள்ளே ஊடுருவிக் கொண்டிருக்க அந்த இரவின் நிமிடங்கள் நகர்ந்து கொண்டிருந்தபோது, மெதுவாக தன் கைப்பையிலிருந்து ஒரு நோட்டுப்புத்தகத்தை எடுத்து விரித்தார் அண்ணன் செல்வராஜ்குமார்.

அதில் இசைக்குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன. சமீபத்தில் வெளியான பாடலுக்கு இசைக்குறிப்புகளை மெதுவாக அழுத்தந் திருத்தமாக எழுதத் தொடங்கினார்.

அவ்வப்போது அந்தப் பாடலின் மெட்டை முணுமுணுத்துக் கொண்டே விரல்களை விட்டு எண்ணியபடி இருந்தார்.

அவர் இசைக்குழுவின் ஒரு பிரதான உறுப்பினர் என்பதை நான் அறியாத நேரம் அது.

அப்போது ஒரே மேஜையில் அருகருகே அமர்ந்திருந்த எங்களுக்குள் நடந்த சிறு உரையாடல்:

நான், "அண்ணே, நோட்ஸ் எல்லாம் எழுதுறீங்க. மியுசிக் கத்துக்கிறீங்களா?"

அதற்கு அவர், "தம்பீ. பாட்டுக் கச்சேரிக்கு போயிருக்கியா?"

"ஆமா போயிருக்கேன்".

"கீ போர்டு கிடார் வாசிக்கிறவங்க இதை வச்சித்தான் வாசிப்பாங்க".

"அப்போ நீங்க கீ போர்டு வாசிப்பீங்களா?"

"அட என்னப்பா நீ...  நம்ம கச்சேரிக்கு வர்றியா? அடுத்த வாரம் ஜிம்கானாவுக்கு வா!"

அப்போது தான் இவர் கச்சேரியில் கீ போர்டு வாசிப்பவர் என்று தெரிந்துகொள்கிறேன்.

அந்த தருணத்தில் நான் பத்திரிகைகளில் சில கட்டுரைகள் கவிதைகள் எழுதியிருப்பதாக மெதுவாக ஆரம்பித்தேன்.

அவர், "ஏ கவிதை எல்லாம் எழுதுவியா? அப்போ பாட்டு?"

அதற்கு நான், "பாட்டு....இதுவரைக்கும் எழுதினதில்ல. ஆனா முயற்சி பண்ணலாம்"

"எங்கே ஒரு பாட்டு எழுது பார்க்கலாம்."

நான் தயங்கிக் கொண்டே, "மெட்டுப் போடுவீங்களா? ஒரு மெட்டுக் குடுத்தா சுலபமா இருக்கும். எதைப்பத்தி எழுதுறது?"

"நீ மொதல்ல எழுது. எதைப்பத்தி வேணும்னாலும் எழுது. பார்க்கலாம்".

நான் சிந்திக்க ஆரம்பித்தேன். இது ஓர் அழகான பரீட்சை. எனக்கு என்ன தெரியும் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்.

இயற்கையைப் பற்றி எழுதினால் என்ன? மனதில் காட்சிகள் விரிகின்றன.

எழுத ஆரம்பித்தேன்.

சோலைப் பூக்களைத் தென்றல் தாலாட்டும் - பொன்
மாலை வேளையில் நிலவு முகம் காட்டும் - இந்தக்
காலம் நமதாகும் - இயற்கைக்
கோலம் இனிதாகும்

அந்தத் தாளை அவருக்குத் தெரியுமாறு அவர் பக்கம் நகர்த்தினேன்.

படித்துப் பார்த்து விட்டு, "நல்லா எழுதியிருக்கியே...இதைப் பல்லவியா வச்சிக்கலாம்".
மெதுவாக மெட்டுப் போட்டுப் பார்த்தார்,

மேஜையில் இலேசாகத் தாளம் போட்டுக்கொண்டே, "ஏ தம்பி! அப்படியே சரணம் இன்னும் ரெண்டு பத்தி எழுது! "

நடந்து கொண்டே மனதில் காட்சி விரித்துக் கொண்டேன். ஒவ்வொரு வரியாக மனதில் தோன்றத் தோன்ற கோர்வைப் படுத்திக்கொண்டே வந்தேன்.

நடந்துகொண்டே மிதந்துகொண்டு இருந்தேன்.

அந்த இரவிலேயே அந்தப் பாடலை எழுதி முடித்தேன்.


அதுதான் இந்தப் பாடல்: முதல் பாடல் !


-உதயகுமார் ஜே.ஆர்.

சோலைப் பூக்களை

சோலைப் பூக்களைத் தென்றல் தாலாட்டும் - பொன்
மாலை வேளையில் நிலவு முகம் காட்டும் - இந்தக்
காலம் நமதாகும் - இயற்கைக்
கோலம் இனிதாகும்!

குடைவிரித்து நின்றமரம் தலையசைக்கும்
குருவிகளின் கூட்டம் வரச் சம்மதிக்கும்
பாய்ந்துவரும் நதியலையோ சலசலக்கும்
பாறைமீது மோதியபடி கலகலக்கும்

காலம் நமதாகும் - இயற்கைக்
கோலம் இனிதாகும்!

இரைதேடிய பறவைகள் நம் அறைதேடும்
கரைதேடிய நதியலைகள் விரைந்தோடும்
உயரவளர்ந்த தென்னையதில் முகம்பார்க்கும்
இரவுவர வானம் தன் விளக்கணைக்கும்

காலம் நமதாகும் - இயற்கைக்
கோலம் இனிதாகும்!

குனிந்தபுல் நிமிர்ந்துபார்க்கக் காற்றடிக்கும்
நிமிர்ந்துவிட்டு நிலவைப்பார்த்துக் குனிந்துவிடும்
மறைந்து மறைந்து மீண்டும் நிலவு தோன்றிவிடும்
மலர்ந்துவிட்ட அல்லிமலர் வெட்கப்படும்

காலம் நமதாகும் - இயற்கைக்
கோலம் இனிதாகும்!


-உதயகுமார் ஜே.ஆர்.

காணும் இடமெலாம் அழகு



காணும் இடமெலாம் அழகு
கண்டு ரசித்திடப் பழகு
உள்ளம் ஒன்றிட எண்ணம் நின்றிட
கண்ட பொருளெலாம் அழகு!

சுற்றும் பூமிக்குச் சுகமாக
சூரியன் போர்த்தும் ஒளியழகு
மேகம் பிரித்துத் திரியாக
வானம் பொழியும் மழையழகு

கலகல வென்றே சிரித்தபடி
கடந்து செல்லும் நதியழகு
கரைதொட்டுக் கால்கழுவும்
நுரை தாங்கிய அலையழகு

புல்பட்டுச் சேலை உடுத்தி
வளைந்தோடும் மலையழகு
ஒருகாலில் கிளைகள் தாங்கி
ஓங்கிநிற்கும் மரம் அழகு

மழை ஓய்ந்த பின்னாலே
வான் வரையும் வில்லழகு
வெயில் சாயும் முன்னாலே
முலாம் பூசும் வானழகு

•••

எட்டுவைத்துப் பூமியளக்கும்
இளம் பிஞ்சின் நடையழகு
எழுஸ்வரங்கள் தெரியாமல்
இழுக்கின்ற பாட்டழகு

சேய் முயன்ற முகப்பூச்சில்
குறை இருந்தால் ஓரழகு
பொட்டுவைத்துப் பூவைத்தால்
பூமியில் இனி யாரழகு?

பால்முகங்கள் பள்ளிசெல்ல
வாரிய தலையில் வகிடழகு
வகுப்பறையில் குருவிகளாய்
கீச்சுக் குரல் பேச்சழகு

பள்ளி முடிந்து வெளியேறி
துள்ளி வரும் படையழகு
வெள்ளி நிலா தோற்றிடுமே
பிள்ளை முக ஒளிஅழகு

காணும் இடமெலாம் அழகு
கண்டு ரசித்திடப் பழகு
உள்ளம் ஒன்றிட எண்ணம் நின்றிட
கண்ட பொருளெலாம் அழகு!

உதயகுமார் ஜே,ஆர்

8K எக்ஸ்பிரஸில் (8K Express) மே 2016-ல் வெளியானது




இறைவனின் ஊடகங்கள்-1



வாழ்க்கையில் எத்தனையோ பேரை நாம் சந்திக்கிறோம். மனதில் உள்ளதைப் பேசுகிறோம், சிரித்து மகிழ்கிறோம்.

இவற்றை நம் இஷ்டப்படியே செய்கிறோம்.

அதே சமயம், ஒருவரின் கைகளைப் பற்றிக் கொள்ளும் போது பேசாமலேயே நமது நேசத்தை சொல்லிவிடுகிறோம்.

இங்கே வார்த்தைகள் இல்லை. நமது கைகளும் முகபாவமும் மொத்த உடலும் சேர்ந்து பேசுகின்றன.

பல நேரங்களில் கண்களும் புன்னகையுமே பேசுகின்றன.

நம் விருப்பத்தோடு நாம் நினைத்தபோதெல்லாம் பேசினாலும், நமது முயற்சியே இல்லாமல் எப்போதும் இந்த உலகத்திற்கு தகவல் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். ஆம், அது உடலின் மொழி!

இதில் புதுமையாக என்ன இருக்கிறது?

நீங்கள் நண்பரோடு பேசுகிறீர்கள். பேசுகின்ற வார்த்தைகளின் அர்த்தத்திற்கும் மேலாக ஒரு விஷயம் அவரின் மனதில் தோன்றுமானால் அது உங்களின் முயற்சியால் ஏற்படவில்லை!

நீங்கள் பேசிய பேச்சின் ஒரு வார்த்தையோ உங்களின் உடல் அசைவோ கூட மென்மேலும் அவருக்குத் தகவலைச் சொல்லலாம்.

சமயங்களில், சட்டையின் நிறமோ நெற்றியில் இட்டுக்கொண்ட திலகத்தின் வடிவமோ கூட இதைச் செய்து விடுகிறது.

ஆனால் உங்களின் மூலமாக அவருக்குத் தகவல் செல்கிறது!

நீங்களாகக் கொடுக்கவில்லை. அவராக எடுக்கவில்லை.
அந்த சமயத்தில் நீங்கள் ஊடகமாகி விடுகிறீர்கள்

இறைவன் நம்மிலிருந்து பிறருக்கு ஏதோ ஒன்றை உணர்த்திக் கொண்டே இருக்கிறார்.

நாம் எப்போதும் இறைவனின் ஊடகமாகவே இருக்கிறோம், நம்மை அறியாமலேயே!

நல்ல விஷயங்களைத் தரும் ஊடகமாக நாம் இருந்தால் மிக்க மகிழ்ச்சியே!

-உதயகுமார் ஜே.ஆர்.

இரண்டாம் பகுதி...


 

புத்தகங்கள்


வார்த்தைகள்
சப்தமில்லாமல் சந்தித்துக்கொள்ளும்
நந்தவனம்!

காலம் தன் வரலாற்றை
வசதியாக வரைந்துகொள்ள
எடுத்துக்கொள்ளும்
சாதனைச் சாதனம்!

அறிவுப் பரிணாமத்தின்
அச்சுப் பதிவு!

எழுத்துக்கள் வரிசைகளில்
கருத்துக்களோ குவியல்களில்!

எத்தனைமுறை கேட்டாலும்
சலிப்படையாமல்
திரும்பத் திரும்ப
கற்பிக்கும் ஆசான்!

இறந்த பின்னாலும்
எழுதியவன் பேசும்
அற்புத ஊடகம்!

ஆதியில்
ஓலையே தாளானது
பாதியில்
காகிதம் தாளானது
மீதியில்
மின்திரையே தாளானது!

எந்த வடிவிலும்
சிந்தையின் பதிவுகளை
தாள்களின் தொகுத்தால்
புத்தகமே!

எண்ணங்களைப் பார்க்கமுடியுமா?
புத்தகங்களைப் பாருங்கள்!

அது
வார்த்தைகள்
சப்தமில்லாமல் சந்தித்துக்கொள்ளும்
நந்தவனம்!


உதயகுமார் J.R.

தென்றல் மாத இதழில் பிப்ரவரி 2011-ல் கவிதைப்பந்தல் பகுதியில் வெளியானது.






சிறுவர் பாடல்

கலிஃபோர்னியா தமிழ்க் கழக ஆண்டுவிழாவில் தொடக்கப் பாடலாக பள்ளிச் சிறுவர்களால் பாடப்பட்டது.


பல்லவி:

அன்னை பூமியை விட்டுப் பறந்தோம்
ஆயிரமாயிரம் தொலைவு கடந்தோம்
அன்னிய பூமியில் காலடி வைத்தோம் - கை
பின்னிய படியே நட்புகள் சேர்ந்தோம்!

சரணம் 1:

அடுத்தவர் மண்ணில் வசித்து வந்தாலும்
அன்னையின் மொழியில் ஆர்வம் கொண்டோம்
தொன்னூற் றொன்பதில் ஈரைந்து பேருடன்
திண்ணை போலொரு பள்ளியைக் கண்டோம்!

விண்ணை முட்டும் விமானம் போலே
எண்ணம் இன்றோ ஆயிரம் மேலே!

சரணம் 2:

ஞாயிறு தோறும் தமிழைப் படித்து
ஞாயிறு போலே அறிவில் சிறப்போம்
தாய்களும் சேய்களும் கற்றுச் செல்லும்
இந்தப் பள்ளியும் ஆலயம் என்போம்

அறைகளில் துளிர்விடும் செடிகள் அல்ல
ஆலமரங்கள் நாங்கள் என்போம் !

உதயகுமார் J.R.

தமிழும் நாமும்

கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்தின் ஆண்டு விழாவிற்காக எழுதிய பாடல் இது.

கர்நாடக இசைப் பாடகர் காயத்ரி சத்யா அவர்கள் பாடி சிறுவர்களுக்குப் பயிற்சி கொடுத்து அரங்கேற்றிய பாடல். இந்தப்பாடலைப் பெற்றுப் பயிற்சிக்கு ஆவன செய்த கவிதா செந்தில்குமாருக்கு என் நன்றிகளோடு...

காயத்ரி சத்யா அவர்கள் பாடிக் கொடுத்த ஒலி வடிவம் இந்த இணைப்பில் கேட்கலாம்.

ஞாயிறு என்றால் தமிழ்ப்பள்ளி !
திங்கள் முகமே வா துள்ளி !
செவ்வாய் திறந்து தமிழ்பேசு !
சொற்கள் சிறுசிறு பட்டாசு !

அறிவில் புதனாய் ஒளிவீச
கல்வி யாழமும் கைகூட
கண்டோம் இங்கொரு தமிழ்ப்பள்ளி !
காணக் கிடைக்கா விடிவெள்ளி !


-உதயகுமார் JR
மே 2010
கலிஃபோர்னியா தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா







மின்னல்


தென்றல் மாத இதழில் ஜூன் 2015-ல் கவிதைப்பந்தல் பகுதியில் வெளியானது. சரஸ்வதி தியாகராஜன் அவர்கள் கொடுத்த ஒலிவடிவம் இங்கே.

       
இது
இயற்கை தரும்
இலவச மின்சாரம்

அது
வழங்கும் தருணமோ
மழைக்கால ரகசியம்

அத்தனை ஆற்றலையும்
கொள்ளவோ கலனில்லை

•••

ஆக்க முடியாதது

கட்டிடங்களின்
இடிதாங்கிகளில்
உச்சிக் கம்பிகளில் அகப்படும்

•••

வானம்
தனது கைரேகைகளை
யாரிடம் காட்டுகிறதோ?

•••

வெளிச்ச வலைவீசி
யாரையேனும்
சிறைப்பிடிக்கப் பார்க்கிறதா?

•••

அங்கே என்ன
ஆகாயம் பிளக்கிறதா?
இல்லை
இருட்டு வெளி உடைபடுகிறது!

•••

மழைநாட்களில்
ஒளிவிழாத காடுகளில்
ஊடுருவிப் பார்க்கிறது
விண்ணகத்துக் காவல்!



உதயகுமார் JR










உங்களில் ஒருவன்


தீர்ந்துபோன சனியும் ஞாயிறும்
திரும்பத் திரும்ப வரும் என்றே

தீராத வேட்கையில்
தூக்கம் கலைத்து

கண்களில் தேங்கிய
கனவைத் தொலைத்து

படுக்கை விடுத்துத்
திங்களைத் தொடுவோரில்...
                           உங்களில் ஒருவன்

திங்கள் முதல் வெள்ளி வரை
விடியல் முதல் மாலை வரை

கணினிகளின் திரைகளுக்கே

கண்களை ஒப்படைத்து

மூளைக்கும் விரல்களுக்கும்
களைக்கும் வரை பளுகொடுத்து

மென்பொருளில் மேய்கின்ற
ஜனத்திரள்களில்...
                          உங்களில் ஒருவன்

இலையுதிர்காலக் கனிகள்



ஒவ்வொரு வாழ்வும் ஒவ்வொரு திசையில்
ஓய்விலாமலே செய்கிற பயணம் !
எவ்விதம் முடியும் எங்கே முடியும்
ஒவ்வொரு நெஞ்சும் கொள்வது சலனம் !

போகும் பாதையில் காண்பவர் யாரும்
சேரும் வரையில் வருவதுமில்லை !
வருபவர் யாரும் இன்னொரு திசையில்
வருவார் என்பது நிச்சயமில்லை !

நிச்சயம் இல்லாப் பொழுதுகள் மட்டும்
நித்தம் நித்தமும் பனியாய்க் கரையும் !
நித்தியமில்லாக் காட்சிகள் யாவும்
நீரில் கோலம் நெருப்பில் தாளம் !

இனியொரு சங்கமம் எங்கே என்பது
இலையுதிர்க்காலக் கனிபோல் தோன்றும் !
இனிமைப் பொழுதுகள் என்று வருமோ
எண்ணி எண்ணியே இளகிடும் உள்ளம் !

பழகிய வரையில் உத்தம நெஞ்சும்
விலகிய பொழுதில் கொட்டிய அன்பும்
வாழ்வோ ஏட்டில் எழுதிக்கொள்ளும் !
வாழும் நாட்களின் அழியாச் செல்வம் !


                                                                       உதயகுமார் JR



செப்டம்பர் 2008-ல் தென்றல் மாத இதழில் வெளியானது.
                                                                      
                                                                      

சரணாலயம்


தென்றல் மாத இதழில்  ஆகஸ்ட் 2010-ல் வெளியானது.
தென்றல் இணையதளத்தில் சரஸ்வதி தியாகராஜன் அவர்கள் கொடுத்த ஒலி வடிவம் இங்கே.


மயிலுக்கு மலைகளில் சரணாலயம் - சின்னக்
குருவிக்கு மரங்களில்  சரணாலயம்
மானுக்கு வனங்களில்  சரணாலயம் - இந்த
மனதுக்கு எவ்விடம்  சரணாலயம் ? 


தவழ்கின்ற பருவத்தில் யாருக்குமே
தாய்மடி ஒன்றே சரணாலயம் !
விளையாடும் தருணத்தில் யாராகிலும்
கேளிக்கை ஒன்றே  சரணாலயம் !

நேசிக்கும் நேரத்தில் நெஞ்சத்திற்கு
நெருங்கிய இதயங்கள்  சரணாலயம் !
அலைபாயும் நெஞ்சுக்கு இடமில்லையே !
அதற்கென்று ஏதொரு சரணாலயம் ?

துடிக்கின்ற நெஞ்சுக்கு இரவுகளில்
துயில்கின்ற இடங்களே சரணாலயம் !
அழுகின்ற நேரத்தில் துன்பம் வெல்ல
ஆறுதல் தருமிடம் சரணாலயம் !

புகழ்கொள்ளும் பொழுதினில் நெஞ்சத்திற்கு
புவிசூழ்ந்த வானமே சரணாலயம் !
கணத்திற்கு கணம்மாறும் உள்ளத்திற்கு
கண்டதுண்டோ யாரும் சரணாலயம்?




உதயகுமார் JR