முதற் பக்கம்

சுபதினம் சுபதினம்

அது 94-ம் ஆண்டு.

ஸ்பிக் நிறுவனத்தின் 25-வது ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

நிறுவனத்தின் விழாக்களில் இசையமைக்கும் பொறுப்பு செல்வராஜ்குமாரிடம் இருந்தது.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே, ஒருநாள் பகல் பணியில் இருக்கும் போது செல்வராஜ்குமார் என்னிடம் வந்தார்,
"தம்பி நம்ம கம்பெனிய பத்தி ஒரு பாட்டு எழுதுறியா? வர்ற ஆண்டு விழாவில் போடப்போறோம்"

ஒருநொடி திகைத்து, நகைத்தேன். "நிஜமாவா?"

"ஆமாப்பா. சீக்கிரம் எழுத ஆரம்பி! எப்ப கிடைக்கும்?"

"அண்ணே கொஞ்சம் டைம் குடுங்க. நான் மொதல்ல நம்ம கம்பெனி வரலாறு நல்லா தெரிஞ்சிக்கணும். அப்பத்தான் எழுத வரும்"

"ஏ என்னப்பா நீ... சரி ஒரு வாரத்தில எழுதிக் குடு!"

அவர் அன்புக் கட்டளை இட்டபின் மிகப்பெரிய பொறுப்பை ஏற்றதுபோல் உணர்ந்தேன்.

ஒரு வாரத்தில் தகவல்களைச் சேர்த்து எழுதிக்கொடுத்தேன். அந்தப் பாடலுக்கு ஒரு கர்நாடக மெட்டமைத்தார்.

ஸ்பிக் நிறுவனத்தின் 25-வது ஆண்டு விழாவின் ஆரம்பப் பாடலாக திறந்தவெளி அரங்கில் அந்தப் பாடல் அரங்கேற்றமானது.


அந்தப் பாடலை எழுதிய விஷயம் ஒரு சில நண்பர்களுக்கே தெரிய, சக நண்பர்களோடு கூட்டத்தில் ஒருவனாக அமர்ந்து ரசித்தேன்.

மேடையில் பாடல் அரங்கேறிய போது, அரங்கம் நிரம்பிய பிரம்மாண்ட கூட்டம். எதிரே இருந்த மேடையில் வாத்தியக் கருவிகளின் நடுவே அமர்ந்து கர்நாடக ராகத்தில் அமைந்த பாடலைப் பாடியபோது, அவரின் கம்பீரக் குரலில் பாடல் உயிர்பெற்றுக் காற்றுமண்டலமே இசையாலும் பாடலாலும் நிரம்பியது! அந்தப் பாடல் இதோ!



சுபதினம் சுபதினம் சுபதினமே  - இந்த
நாளேதான் நமக்கு சுபதினமே!
சபைதனில் வந்துள்ள அனைவருக்கும்
எங்கள் பணிவான வந்தனமே!

மாபெரும் நிறுவன சரித்திரமொன்றை
பாடிச் செல்லவே வந்தனம்!
பாருக்குள் பாருங்கள் ஓங்கி வளர்ந்திடும்
ஸ்பிக்கெனும் நமது நிறுவனம்!

                                                              (சுபதினம்)
 
இருபத்தி ஐந்து ஆண்டுக்கு முன்பு
இருந்தது இங்கொரு முட்காடு
திடமனம் கொண்ட சிதம்பரம் ஐயா
அடிக்கல் ஒன்றை அமைத்தாரே!

எழுபத்து மூன்றில் கட்டுமானப்பணி
நடந்தது நாட்கள் கடந்தது
எழுபத்து நான்கில் எழுபத்து ஐந்தில்
சோதனை ஓட்டம் நடந்தது

நடந்து முடிந்ததும் பூமியைத்தொட்டது
முதல் மணிமுத்து யூரியா!
தாவர இனமே புத்துயிர் பெற்றது
தரணியே பயன் பெற்றது!
                                                              (சுபதினம்)

எழுபத்து ஐந்தில் இரண்டாம் பாகம்
கட்டுமானப் பணி தொடர்ந்தது
எழுபத்து ஆறில் டிஏபி எனும்
தாவர உணவு பிறந்தது!

ஆலைப்பணியில் இருக்கின்ற பேருக்கு
நகரியம் ஒன்று அமைந்தது
நீச்சல் குளமும் கோவிலும் அரங்கமும்
ஜிம்கானாவும் வளர்ந்தது!

மருத்துவமனையும் வங்கியும் பள்ளியும்
கடைகளும் கொண்டது நகரியம்
பெருந்தவமிக்கும் மாமுனி கண்டால்
தவமே துறந்திடும் அதிசயம்!
                                                              (சுபதினம்)
 

-உதயகுமார் ஜே.ஆர்.

No comments:

Post a Comment