முதற் பக்கம்

மகளிர்/அன்னையர் தினம்

அட்லாண்டா தமிழ்ச் சங்கத்திலிருந்து மே மாத முதல்வாரத்தில் ஓரு கைப்பேசி அழைப்பு வந்தது.

அழைத்தவர் அந்தச் சங்கத்தின் ஆர்வலர் வைஷ்ணவி சந்தோஷ்.

மே பத்தாம் தேதியன்று அன்னையர் தினம் வருகிறது, அதற்கு சில வரிகளை எழுதித்தர முடியுமா? நான் காணொளியில் வாசித்து இணையத்தில் பதிவேற்றம் செய்யப் போகிறேன் என்கிறது குரல்.

சற்றே யோசித்துச் சம்மதித்தேன்.  பாடுபொருள் மிகப்பெரியது. நான்கைந்து வரிகளில் உரைநடை வடிவில் எழுதுவதா கவிதை வடிவில் எழுதுவதா என்று யோசித்தேன்.

கவிதையால் அலங்கரிப்பதே மேன்மையெனத் தோன்றியது.

அந்தக் கவிதை இதோ!


மேலோனின் ஆணைக்குக் கருவானாள்
மென்மையான சுகவுலகில் உயிரானாள்
மேனியினால் திருமகளாய் உருவானாள்
மேன்மைகளில் மேன்மைக்கு மகளானாள்

பூமியின் தோள்களிலே தவழ்ந்தபடி
பூங்கால்கள் எட்டுவைத்து உலகளந்தாள்
தாயவளின் மடிகளிலே மகிழ்ந்தபடி
சிமிட்டுகின்ற பார்வைகளில் வானளந்தாள்

நட்டுவைத்த பூச்செடிகள் ஆசைகொள்ள
நடைபயிலும் நந்தவன மயிலானாள்
பொட்டுவைத்துப் பூச்சூடிப்  புனிதம்கொள்ள
மங்கையென்று அவதரித்து ஒயிலானாள்

விடைதெரிந்த வினாக்களையும் வினவியபடி
வீடே ஓர்  சிறையென்று சலித்தபடி
மடைதிறந்த எண்ணங்கள் மனதில்வர
தடைதகர்க்கும்  யுவதியென்று பரிணமித்தாள்

காலமென்ற ஆசானின் கட்டளைக்கும்
கடைசிவரை காத்திருக்கும் ஜீவனுக்கும்
கண்ணகியைப் போலவள் கற்புடைத்தாள்-தன்
கணவனிடம் தன்னை ஒப்படைத்தாள்

படைப்போனும் கனிவான பார்வையிலே - தன்
பாத்திரத்தை ஏற்பவர்யார் எனத்தேடி
பெண்ணிடமே தன்பங்கில் பாதிதந்து
பெண்ணினமே மேன்மையெனப் போற்றிவைத்தான்!


வைஷ்ணவி சந்தோஷின் காணொளி



உதயகுமார் J.R.